திருப்பதி கோவிலில் 36 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: பவுர்ணமி கருட சேவை ரத்து
- பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.
- பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள குடோன்களில் பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.
இன்று இலவச தரிசனத்திற்கு 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். இதனால் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.
நேற்று அதிகாலை முதலே இலவச தரிசனத்தில் 85 ஆயிரத்து 366 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இதில் 48 ஆயிரத்து 183 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருமானம் ரூ.4 கோடி கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மாலை ஜோஷ்டாபிஷேகத்தையொட்டி ஏழுமலையானுக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முத்துக் கவசம் அலங்காரம் நடைபெறும். சாமியின் அழகை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருட சேவை (தங்க கருட வாகன வீதி உலா நடப்பது வழக்கம்).
கோவிலில் ஜோஷ்டாபிஷேகம் நடப்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்க இருந்த பவர்ணமி கருட சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.