வழிபாடு

ஞானத்தை அருளும் தண்டாயுதபாணி

Published On 2023-02-28 06:49 GMT   |   Update On 2023-02-28 06:49 GMT
  • முருகப்பெருமான் ‘சரவணன்’ என்று அழைக்கப்படுகிறார்.
  • பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன.

'சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை' என்பது பழமொழி. ஞானப்பழத்துக்காக கோபித்து கொண்டு முருகன் நின்ற இடம் பழனிமலை. பல்வேறு சிறப்புகள் பெற்ற இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஞானத்தின் கடவுளான தண்டாயுதபாணியை நோக்கி பக்தர்கள் அருள் வேண்டி வருகின்றனர். 'சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தை மனமுருகி சொல்பவர்களுக்கு செல்வம், கல்வி, முக்தி, எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயம் போக்கல் என்னும் பேறுகள் கிடைக்கின்றது.

பொய்கையில் உள்ள நாணல் புற்களுக்கு மத்தியில் தாமரை மலர்களில் தோன்றியதால் முருகப்பெருமான் 'சரவணன்' என்று அழைக்கப்படுகிறார். மேலும் முருகன் திருத்தலங்களில் அமைந்திருக்கும் பொய்கைகள் அனைத்தும் 'சரவண பொய்கை' என்றே அழைக்கப்படுகிறது. பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பூக்கும் மலர்கள், பட்டை, பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை, வலியை குறைப்பதோடு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கக்கூடியது.

உலக மக்களை காக்கும் பொருட்டு பதினென் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாஷாணத்தால் முருகப்பெருமானின் சிலையை வடிவமைத்திருக்கிறார். இந்த சிலையில் அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை அருந்தினால் தீராத பிணிகளும் வந்த இடம் தெரியாமல் தீர்ந்துவிடும். முக்கியமாக திருநீறு, சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு முருகப்பெருமானின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கொடிய நோய்களையும் தீர்க்க கூடியது.

ஆவினன்குடி பழங்காலத்தில் 'சித்தன் வாழ்வு' என்று அழைக்கப்பட்டு இருக்கின்றது. 'சித்தன் வாழ்வு இல்லந்தோறும் முன்றெரியுத்து' என்று அவ்வையார் பாடியுள்ளார். பழனி குன்றின் மேல் மனித மாதவன் என்று ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் அழைக்கின்றனர். சித்தர்கள் தம்மை தெய்வநிலைக்கு மாற்றிக்கொள்ள விரும்பும்போது சித்தனாதனான முருகப்பெருமானே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார் என்று புராணங்கள் மூலம் அறிய முடிகிறது. அவரின் அருளை நாமும் பெற்று சித்தநிலை அடைய முற்படுவோம்.

Tags:    

Similar News