முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
- தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
- பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. விழாவையொட்டி கடற்கரையில் குவிந்த பக்தர்கள் புனிதநீர் எடுத்து சென்று வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9.21 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டனர். தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், தயிர், குங்குமம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால் ராஜேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்களின் கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் அணிவித்தனர். தசரா குழுவினர் மொத்தமாகவும் காப்புகளை வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு வழங்கினர்.
காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துவார்கள். தசரா குழுவினரும் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செவ்வாடை அணிந்து திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசரா பிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். கோவிலில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.
இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகளும், இரவில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், தக்கார் சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.