- சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது.
- கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும்.
திருப்பதி:
கார்த்திகை மாதத்தில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் விஷ்ணு பூஜைகளின் ஒரு பகுதியாக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று கோபூஜை சாஸ்திர பூர்வமாக நடந்தது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து 10 மணி வரை நடந்த கோபூஜையை உலக பக்தர்களின் நலனுக்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பினர்.
முன்னதாக ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்களான வேணுகோபாலசாமி, ருக்மணி மற்றும் சத்யபாமாவை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர். அங்கு, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றுகையில், சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது. கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்றார்.
முன்னதாக கார்த்திகை விஷ்ணு பூஜை சங்கல்பம், பிரார்த்தனை சூக்தம், விஷ்ணு பூஜை மந்திர பாராயணம் நடந்தது. அப்போது உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பசு மற்றும் கன்றுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து பிரசாதம் மற்றும் ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கோபிரதட்சணை செய்யப்பட்டது. நிறைவாக பிரார்த்தனை மற்றும் மங்களம் வேண்டி கோபூஜை முடிந்தது. அதில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.