குருப்பெயர்ச்சி: குருவித்துறை குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
- பரிகார மகா யாக பூஜை நடந்தது.
- குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
இந்த சன்னதியில் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வாரும் காட்சி தருகிறார்.
இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா கடந்த 29-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று பகல் 2 மணி அளவில் பரிகார மகா யாக பூஜை நடந்தது. 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடத்தினர். பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து அர்ச்சகர்கள் புனித தீர்த்தக்குடங்களை எடுத்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.
அதன்பிறகு நேற்று மாலை 5.21 மணிக்கு மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆனதையொட்டி குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர். பரிகார ராசிதாரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.
பிரளயநாதசுவாமி
சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலிலும் நேற்று மாலை பரிகார யாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.