கழுகாசலமூர்த்தி கோவிலில் மலர்க்காவடி பூச்சொரிதல் விழா ஊர்வலம்
- முருகப்பெருமானுக்கு மலர் அபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று மலர்க்காவடி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தது. 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து காலை 8 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு குமரகுருபர சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம், சிவப்பிரகாச சுவாமிகள், தம்பிரான் சுவாமிகள், திருக்கோவிலூர் ஆதீனம், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளுரை வழங்கி மலர்க்காவடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் வரவேற்றார்.
கோவிலில் இருந்து புறப்பட்ட மலர்க்காவடி ஊர்வலம் ஆறுமுகம் நகர், இந்திரியம் தம் தெரு, கீழபஜார் மற்றும் கிரிவல பாதை வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.
பின்னர் முருகப்பெருமானுக்கு மலர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உச்சிகால பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.