கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
- ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திரு விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி மதியம் 12 மணியளவில் யாகசாலையில் தீபாராதனையும் தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகமாயி அலங்கார தீபாராதனைக்கு பிறகு தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி 5-வது நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை (சனிக்கிழமை) மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளுவார். அங்கு முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனை சுவாமி வதம் செய்வார்.
சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடு கட்டுதல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. சந்தராஜ் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.