திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: ஜெயந்திநாதர், அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் பவனி
- ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை.
- ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளல்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இரவில் சுவாமி, அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.