வழிபாடு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2023-10-13 04:32 GMT   |   Update On 2023-10-13 04:32 GMT
  • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
  • லட்சக்கணக்கான பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

தூத்துக்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.

விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

11-ம் நாளான 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர். 12-ம் நாளான 26-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் தவ வலிமை மிக்கவராக திகழ்ந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது ஆணவத்தால் அவரை மதிக்க தவறியதோடு அவமரியாதையும் செய்தார் வரமுனி. இதனால் மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர், வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என சாபமிட்டார்.

வரமுனி எருமைத்தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசூரனாக மாறினார். முனிவராக வாழ்வை தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார். மகிஷாசூரனின் இடையூறுகளை தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி மகிஷாசூரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டார். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை அன்னை வதம் செய்யும் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

வேடம் அணியும் பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் சாதியை குறிக்கும் கொடிகள், ரிப்பன்கள் கொண்டு வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News