வழிபாடு

அமர்நாத் பனிலிங்கம் உள்ளிட்ட ஜோதிர்லிங்கங்களை படத்தில் காணலாம்.

மகாசிவராத்திரியையொட்டி பிரம்மா குமாரி அமைப்பு ஏற்பாடு: 12 ஜோதிர்லிங்க தரிசனம்

Published On 2023-02-16 02:15 GMT   |   Update On 2023-02-16 02:15 GMT
  • 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பொதுமக்கள் ஜோதிர் லிங்க கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.
  • ஜோதிர் லிங்க தரிசன கண்காட்சி தினமும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை நடக்கிறது.

மகாசிவராத்திரியையொட்டி பிரம்மா குமாரி அமைப்பு சார்பில் சென்னையில் அமர்நாத் பனிலிங்கம் உள்ளிட்ட 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பொது மக்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இலவசமாக பார்வையிடலாம்.

மகாசிவராத்திரியையொட்டி பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் தமிழ்நாடு பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் 21-ந்தேதி வரை அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்க தரிசன காட்சி அமைந்தகரை லட்சுமி தியேட்டர் வளாகம் அய்யாவு மகாலில் நடைபெறுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு கண்காட்சி தொடக்கவிழா நடக்கிறது.

ஜோதிர் லிங்க தரிசன கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி கழக நிர்வாக இயக்குனர் டி.ஜி.பி. ஏ.கே. விஸ்வநாத், கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த், அண்ணாநகர் போலீஸ் இணை கமிஷனர் மனோகரன், ரெயில்வே மூத்த வர்த்தக மேலாளர் அரி கிருஷ்ணன், பிரம்மா குமாரிகள் அமைப்பின் தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளர் பீனா, ஓய்வு பெற்ற நீதிபதிகள் வள்ளிநாயகம், ஜோதிமணி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

நடிகைகள் லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நடிகர் செந்தில், 'ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம், இசையமைப்பாளர் சத்யா உள்பட திரையுலகத்தினர் மற்றும் டாக்டர்கள். வக்கீல்கள், கல்வியாளர்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்கிறார்கள். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பொதுமக்கள் ஜோதிர் லிங்க கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

ஜோதிர் லிங்க தரிசன கண்காட்சி தினமும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை நடக்கிறது. இந்த தரிசன கண்காட்சி குறித்து தமிழ்நாடு மண்டல பிரம்மா குமாரிகள் ஒருங்கிணைப்பாளர் பீனா கூறியதாவது:-

மகாசிவராத்திரி விழாவை சிவ ஜெயந்தி விழாவாக பிரம்மா குமாரிகள் அமைப்பு 87 வருடங்களாக நடத்திவருகிறது. சிவன் என்ற சொல்லுக்கு மங்களம் செய்விப்பவர் என்று பொருளாகும். துக்கம் நிறைந்த இந்த உலகில் ஜோதியாக விளங்கும் அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பரமாத்மா திரிமூர்த்தி சிவன் இந்த பூமியில் அவதரிக்கும் புண்ணிய தினமே சிவ ஜெயந்தி (சிவராத்திரி).

பரமாத்ம தந்தை சிவ பரமாத்மா 1936-ம் ஆண்டு பிரஜாபிதா பிரம்மா பாபாவின் சரீரத்தில் வந்து ஈஸ்வரிய ஞானம் மற்றும் ராஜயோக தியான கல்வியை அளித்து, அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடக்கும் இவ்வுலகை மீண்டும் சொர்க்கமாக மாற்றுகிறார். இறைவனின் நினைவாக பாரதத்தில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்கங்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தரிசித்து புண்ணியம் பெற வசதியாக அவற்றின் தத்ரூப காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றை தரிசித்து அனைத்து மக்களும் சிவராத்திரியின் ஆன்மிக ரகசியத்தை அறிந்துகொள்ள அழைக்கிறோம். கண்காட்சியையொட்டி ஓட்டுனர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் சிறப்பு வகுப்புகள், தியான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பெண்கள் பங்கேற்கும் விளக்கு தியானமும் நடைபெறுகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்க மாணவர்களுக்காக தனி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்ற தலைப்பிலும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். அனைவருக்கும் இலவச ராஜயோக தியான பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News