வழிபாடு

மகரவிளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Published On 2023-12-31 04:57 GMT   |   Update On 2023-12-31 04:57 GMT
  • சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
  • 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலை:

2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் இரவே நடையும் அடைக்கப்பட்டது. இந்த மண்டல சீசனில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

சில நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. அந்த சமயத்தில் பக்தர்கள் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

நடை திறப்பையொட்டி நேற்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். பிறகு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பிறகு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பின்னர் மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

வருகிற 15-ந்தேதி அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.

அதேபோல் 15-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை மாளிகப்புரத்தம்மன் கோவிலில் இருந்து 18-ம் படி வரை இரவில் அய்யப்ப சாமி ஊர்வலமும், 19-ந் தேதி அன்று சரம் குத்தி வரை சாமி ஊர்வலமும் நடக்கும். இந்த சீசனில் 20-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே 15-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. அந்த வகையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதே சமயத்தில் உடனடி பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News