மாசி திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா
- சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
- பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
8-ம் திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து மேலக்கோவிலில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சைநிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சைநிற கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. 11-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்பத் திருவிழா நடைபெறும்.