வழிபாடு

மனித வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் ஞானப்பழ கதை

Published On 2023-01-27 07:45 GMT   |   Update On 2023-01-27 07:45 GMT
  • மயில் வாகனத்தில் உலகை சுற்றி வந்தார் முருகன்.
  • இந்த கதை மனித வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

நாரதரின் வீணை இசைக்கண்டு இந்திரன் கனியை பரிசாக அளித்தான். அந்த ஞானப்பழத்தை பெற்ற நாரதர் உலகம் ஆளும் கைலாயத்துக்கு சென்று சிவபெருமான்-பார்வதியிடம் கொடுத்தார். அதை சிவனின் புதல்வர்களான விநாயகர், முருகப் பெருமான் இருவரும் பெற விரும்பினர். அப்போது ஏற்பட்ட போட்டியில் உலகத்தை முதலில் சுற்றி வருபவருக்கே ஞானப்பழம் என முடிவாகியது. அதையடுத்து தன் மயில் வாகனத்தில் உலகை சுற்றி வந்தார் முருகன்.

இதற்கிடையே அம்மை-அப்பனே உலகம் என்ற தத்துவ நெறியை மையமாக வைத்து விநாயக பெருமான் சிவன்-பார்வதியை சுற்றி வந்து கனியை பெற்றுக்கொண்டார். இதனால் கோபமுற்ற முருகப்பெருமான் கைலாயத்தில் இருந்து கோபித்து கொண்டு பழனியம்பதியை வந்து குன்றில் குடியமர்ந்தார் என்பது புராண கதை. ஆனால் இந்த கதை மனித வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

அதாவது இயற்கையின் பெரும்பகுதி உயிர் குலத்திற்கு மகிழ்வை தரக்கூடியது. இதில் கனியும் ஒன்று. இந்த கனியானது மரத்தில் உள்ளபோது அரும்பாகி, மலராகி, காயாகி முடிவில் கனியாகிறது. இந்த படிநிலை முழுமை நிலை எய்தவில்லை எனில் கனி கிடைக்காது. அதாவது மலர் நிலையில் பாழாகி போதல் உண்டு. மலரில் இருந்து பிஞ்சு பிடித்தாலும் உதிர்வதும், காயாகி போவதும் உண்டு. அவ்வாறு காய் ஆனாலும் வெம்பி விழுவதும் உண்டு.

எனவே ஒரு மலர் பிஞ்சாமி, காயாகி, கனியாகி வருவது என்பது பல்வேறு ஆபத்து நிலைகளை தாண்டி வர வேண்டும். அதுபோலத்தான் மனிதனின் நிலையும். அவனுடைய வாழ்க்கை படிமுறையில் வளர்ந்த பிறகே குணம் என்ற குன்றில் ஏற முடியும். இல்லையேல் அழுக்காற்றல் பெற்று அழிந்துதான் போக முடியும். உனது, எனது என்ற நச்சு மரங்கள் ஈன்ற கனிகளே நான், அதிகாரம், காவல், அரசு ஆகியன ஆகியது. மனித அறிவு, அன்பு, இணக்கம், உறவு, என்று வளர்ந்து சொர்க்கத்தை பெறுவதற்கு பதிலாக சண்டை, சிறை என்ற தீயவட்டத்தை மையமாக கொண்டு சுழல தொடங்கியது. இது தவறான பாதை என்று மனித சமுதாயத்துக்கு உணர்த்த தோன்றியது தான் முருகப்பெருமான் ஞானப்பழக்கதை.

Tags:    

Similar News