வழிபாடு

தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.(உள்படம்:- சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்).


நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2023-04-11 05:54 GMT   |   Update On 2023-04-11 05:54 GMT
  • பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  • இன்று ஆகாச ஊரணியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக சத்தியமங்கலம், நார்த்தாமலை, அன்னவாசல், கீரனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்திக்கொண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாலை 3.20 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5.50 மணியளவில் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகாச ஊரணியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News