வழிபாடு

பெருமாளுக்கும் தாயாருக்கும் என்ன பிரச்சினை? ஏன் ஊடல்?...

Published On 2023-04-06 06:34 GMT   |   Update On 2023-04-06 06:34 GMT
  • இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.
  • ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது.

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன்-மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது. அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள். அதாவது, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல், அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை விளக்குகிறது இது.

இந்த கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உத்சவம் நடைபெறுகிறது. சரி... பெருமாளுக்கும் தாயாருக்கும் என்ன பிரச்சினை? ஏன் ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

திருச்சியில் உள்ள உறையூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக் குக்குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தாள். அவளை ரங்கநாதன் திருமணம் செய்தார். இதனால் உறையூரில், கமலவல்லி நாச்சியாருக்கு கோயிலே அமைந்துள்ளது. தாயாரின் திருநட்சத்திரம்-ஆயில்யம். எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூருக்கு வருவார். அவருடன் கமலவல்லி நாச்சியார், சிம்மாசனத்தில் திருக் காட்சி தருவார்.

உறையூரில் நாச்சியாருடன் வீதியுலா வந்து விட்டு, பின்பு ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு வருவார் அரங்கன். 'பெருமாளைக் காணோமே...' என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா? எங்கு சென்று விட்டு வருகிறார் என்பதை அறிந்து, கோபம் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளி யெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறிந்தாள்.

பெருமாள் தன்னைப் பார்க்க வரக் கூடாதென தடை செய்வார் பிராட்டியார் ஸ்ரீரங்கநாதர் சோழ நங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்த விவரத்தை தாயார் அறிந்த கோபம்தான் தடை செய்ததன் காரணம்.

அதன் பிறகு நிகழ்கிற அவர்களின் உரையாடல்கள்தான், சுவாரஸ்யம்! உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன, உங் களின் நகைகள் கலைந்து கிடக்கின்றன. உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே! என்று ரங்கநாதரை அணு அணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக் கணைகளாக்கி தொடுப்பாள் தாயார். "என்ன... என்னையே, சந்தேகப்படுகிறாயா? உனக்காக, கடலில் மூழ்கி விடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்து விடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?" என, தன் மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன் னார் ஸ்ரீஅரங்கன்.

இந்த பிணக்கை நம்மாழ்வார் தீர்த்து வைத்தார்.

பெருமாள் தன் தவறை பிரதான பிராட்டியிடம் ஒப்புக் கொள்ள நாச்சியார் பெருமாளை ஏற்றுக் கொண்டார். பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும். இவ்விழாவை காண்பவர்களுக்கும் திருமணப் பேறு உண்டாகும்.

பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான்.

Tags:    

Similar News