நவராத்திரி பிரம்மோற்சவம்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
- கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வீதிஉலா
- கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. இன்று இரவு `கருடசேவை' நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, `ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாகன வீதி உலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 11 கலாசார குழுக்களை சேர்ந்த 281 கலைஞர்கள் குஸ்ஸாடி நடனம், லம்படா நடனம், சுக்கா பஜனை மற்றும் கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்களும், பெண்களும் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார் போன்ற வேடமிட்டு சென்றனர். வாகன வீதி உலா தொடங்கும் முன் பல்வேறு ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி பிரம்மோற்வ வழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கில் (மோகினி அலங்காரம்) வாகன வீதிஉலா, இரவு கருடசேவை நடக்கிறது.