வழிபாடு

திருப்பதியில் 23-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு `சொர்க்கவாசல்' திறப்பு

Published On 2023-12-19 03:40 GMT   |   Update On 2023-12-19 03:40 GMT
  • `டைம் ஸ்லாட்’ தரிசன டோக்கன்கள் ரத்து.
  • டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருமலை:

திருமலையில் உள்ள அன்னமய பவனில் வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தானத்தின் பல்வேறு துறை தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதன் பிறகு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு `சொர்க்கவாசல்' திறக்கப்படுகிறது. இந்தச் சொர்க்கவாசல் தரிசனம் ஜனவரி 1-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது.

22-ந்தேதி மதியம் 2 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்ட்டர்கள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் திருமலையில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் வழங்குவோம்.

திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதானம், ஜீவகோணா உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமாநாயுடு உயர்நிலைப் பள்ளி வளாகம், பைராகிப்பட்டிகை ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், எம்.ஆர்.பள்ளி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

22-ந்தேதி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட `டைம் ஸ்லாட்' தரிசன (எஸ்.எஸ்.டி.டோக்கன்கள்) டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

தரிசன டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலையில் குறைந்த எண்ணிக்கையிலான அறைகள் மட்டுமே இருப்பதால், இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு திருப்பதியில் அறைகளை பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் நேரில் வரும் புரோட்டோகால் வி.ஐ.பி.பக்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டோக்கன் இல்லாதவர்கள் திருமலையை சுற்றி பார்க்கலாம்

வைகுண்ட துவார தரிசனத்தின் பலன் 10 நாட்கள் நீடிக்கும். எனவே வி.ஐ.பி. பக்தர்கள் மற்றும் பிற பக்தர்கள் 10 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னால் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரலாம். ஆனால், சாமி தரிசனம் செய்ய முடியாது. அவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தலாம். மேலும் திருமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம்.

தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சாமி தரிசனத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News