வழிபாடு

பழனி ஆண்டவனுக்கு காணியும்... காணிக்கையும்...

Published On 2023-02-28 07:03 GMT   |   Update On 2023-02-28 07:03 GMT
  • பக்தர்கள் பழனிக்கு வந்து தானியங்களை சூறைவிட்டும், காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.
  • கறவை மாடுகள், சேவல் முதலியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

பழனி ஆண்டவனை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களின் கடன் தொல்லை தீர, மன அமைதி பெற, விளைச்சல் பெருகி லாபம் கிடைக்க வேண்டும் என பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து காணிக்கைகளை செலுத்துகின்றனர். அதன்படி துன்பம் நிறைவேறினால் கறவை மாடுகள், சேவல் முதலியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதேபோல் விளைச்சல் நன்கு பெருக வேண்டும் என்று வேண்டும் பக்தர்கள், அந்த வேண்டுதல் நிறைவேறிய பின்பு பழனிக்கு வந்து தானியங்களை சூறைவிட்டும், காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.

பொதுவாக தானியங்களை சூறைவிடுதல் என்பது நாட்டுப்புற கோவில்களில் பின்பற்றப்படும் வழக்கமாகும். ஆனால் இந்த வழக்கம் பழனியிலும் காண முடிகிறது. பழனியாண்டவனை செழிப்பு தெய்வமாக கருதும் கொங்கு மண்டல விவசாயிகள் தானியங்களை சூறை விடுகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து வரும் பக்தர்களில் சிலர் முந்திரிக்கொட்டையை சூறைவிட்டு வேண்டி செல்கின்றனர். இந்த சூறைவிடும் பழக்கம் தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு இடையே நிகழும் சமூக ஒருமைப்பாட்டு உணர்வை காட்டுகின்றது.

பழனி மலைக்கோவிலில் நேர்த்திக்கடனாக சில பக்தர்கள் சர்க்கரை, அச்சுவெல்லம், வாழைப்பழத்தார், நெய், கற்கண்டு போன்றவற்றை துலாபார காணிக்கையாக வழங்குவதை பார்க்க முடிகின்றது. அதேபோல் நம்பிக்கை தொடர்பான காணிக்கைகளாக தங்கம், வெள்ளி பொருட்கள், தாலி முதலியவை பக்தர்களால் செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பக்தர்கள் பழனியாண்டவர் மீது வைத்துள்ள பக்திக்கு தங்கள் சொத்துகளையும் காணிக்கையாக அளித்துள்ளனர். பழனியை ஆண்ட மன்னர்கள் பழனியாண்டவனுக்குப் பூஜை செய்வதற்காக நிலங்கள் வழங்கியது பற்றிக் கல்வெட்டுக்கள் எடுத்து காட்டுகின்றன.

பழனிக்கு வரும் பக்தர்களால் நேர்த்திக்கடனாக அதிகம் செலுத்தப்படுவது பணம் ஆகும். பொதுவாகவே கோவிலுக்கு வரும் பக்தர்கள், தான் மட்டுமின்றி சுற்றத்தார், நண்பர்கள் என அனைவரும் உடல்நலம், செல்வவளம் பெற்று வாழ வேண்டும் என்று வேண்டி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல் காசு கோவில் மற்றும் அதன் சார்ந்த நலப்பணிகளுக்கு செலவிடப்படும். சிலர் காசு மட்டுமின்றி தங்க நாணயங்கள், வேல்கள், காசோலைகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றைச் செலுத்தி வழிபடுகின்றனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் பவுண்ட், டாலர், யூரோ என கரன்சி நோட்டுகளை செலுத்துகின்றனர். எனவே நாமும் பழனியாண்டவரின் அருளை பெற காணிக்கை செலுத்தி எல்லா வளமும் பெறுவோம்.

ஆறுமுகங்களின் அழகிய நெறிகள்

முருகனின் ஆறுமுகங்கள் மக்களுக்கு வாழ்க்கை நெறிகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அதன்படி முதல் முகம் சுந்தர அழகையும், 2-வது முகம் தன்னை வாழ்த்தும் அன்பர்களுக்கு வரம் அளிப்பதாகவும், 3-வது முகம் வேத நெறிகளையும், யோக வழிபாடுகளையும் குறிக்கிறது. 4-வது முகம் வீடுபேறு முக்தியை வழங்கிட அன்பர்களை நோக்கி மலர்ந்துள்ளது. 5-வது முகம் பகைவர்களை அழித்து மக்களுக்கு நன்மை வழங்குகிறது. 6-வது முகம் அன்பு பார்வை வீசி நெறி ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது.

Tags:    

Similar News