பழனி கோவிலில் கொண்டாடப்படும் பெரு விழாக்கள்...
- பழனியாண்டவனை தங்கள் குல தெய்வமாக கருதி வழிபடுகின்றனர்.
- பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பழனி முருகன் கோவிலில் நிகழும் விழாக்களைப் பெரு விழாக்கள், சிறு விழாக்கள் என்று பாகுபாடு செய்யலாம். பழனியைப் பொறுத்த அளவில் தைப்பூசமும், பங்குனி உத்திரமும் பெரு விழாக்களாக கருதப்படுதற்குரியவை.
ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் கந்தசஷ்டி, பங்குனி மாதம் வரும் பங்குனி உத்திர விழா, சித்திரை, வைகாசியில் நடைபெறும் அக்னி நட்சத்திர விழாவும், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை விழாவும் குறிப்பிடத்தக்கவை. தைப்பூச திருவிழாவின் போது தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். அதேபோல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாகப் பழனிக்கு வருகின்றனர். இவர்கள் பழனியாண்டவனை தங்கள் குல தெய்வமாக கருதி வழிபடுகின்றனர்.
அதேபோல் பங்குனி உத்திர விழாவும் 10 நாள் கொண்டாடப்படும் பெருவிழா ஆகும். இந்த விழாவின்போது கொங்குநாட்டுப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து பழனியாண்டவனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்கின்றனர்.
தைப்பூசம், பங்குனி உத்திரம், அக்னி நட்சத்திர விழாக்களின் போது பக்தர்கள் பழனி முருகனுக்கு காவடி எடுத்து வருகின்றனர். காவடி எடுத்து வரும் பக்தர்கள் பழனியாண்டவன் மீது காவடிப்பாட்டு பாடிக்கொண்டு வருகின்றனர். இப்பாடல்கள் பழனியாண்டவன் மீது பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாகும். திருவிழா காலங்களில் கோவில் வளாகத்தில் காவடியாட்டம், கும்மி, ஓயிலாட்டம் முதலிய ஆட்டங்கள் நடைபெறுவதை காணலாம். இதனாலேயே பழனி திருவிழா நகரமாக போற்றப்படுகிறது.