ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றம்
- ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம்:
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.