- ரமலானில் நாம் அதிகமாக தொழுகையில் ஈடுபடுவோம், திருக்குர்ஆன் வசனங்களை ஓதுவோம்.
- இறைவனை நினைவு கூர்வதிலும், நல்ல அமல்கள் செய்வதிலும் அதிகமாக ஈடுபடுவோம்.
இஸ்லாமிய மாதங்களில் மிகவும் சிறப்புக்குரியது ரமலான் மாதம். மற்ற மாதங்களை விட இந்த மாதம் கண்ணியம் மிக்கது. அடியார்களுக்கு அருள் வழங்கக் கூடியது. பாவங்களை எரித்து சொர்க்கத்தை அளிக்கக்கூடியது. ஆயிரம் இரவுகளை விட புனிதமான லைலத்துல் கத்ர் என்ற புனிதமான இரவைக்கொண்டது.
உலக மக்களின் நேர்வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்டதும் இந்த ரமலான் மாதத்தில் தான். பொறுமையின் மாதமான இந்த ரமலானில் நாம் செய்யும் நற்செயல்கள், வணக்க வழிபாடுகள், தான தர்மங்கள் ஆகியவற்றுக்கு இறைவனிடம் இருந்து நேரடியாக பல மடங்கு நன்மை பெறக்கூடிய மாதம் இது.
அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: 'நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
இந்த நபி மொழியின் மூலம் ரமலான் நோன்பின் சிறப்பையும், அதற்கு இறைவன் நேரடியாக வழங்கும் நற்கூலியையும் நாம் அறியலாம். அதுவும் ஒரு நற்செயலுக்கு 700 மடங்கு நன்மை. இது குறித்து இந்த நபிமொழி கூறுவதை பாருங்கள்:
அல்லாஹ் கூறுகின்றான்: 'ஒவ்வொரு நன்மையும் அதுபோன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ).
அதுபோல, 'யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்பது நபிமொழியாகும். இந்த நபிமொழியை அபூஹுரைரா (ரலி), அறிவித்துள்ளதாக புகாரி நூலிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரமலான் மாதத்திலேயே நாம் செய்யும் நற்செயல்கள் மூலம் நமக்கு கிடைக்க இருப்பது `ரய்யான்' எனப்படும் சிறப்புமிக்க சொர்க்கம் ஆகும். எட்டுவகையான சொர்க்கங்களில் 'ரய்யான்' எனப்படும் இந்த சொர்க்கம் மட்டும் நோன்பாளிகளுக்கு உரியது. நோன்பாளிகள் மட்டுமே இதில் நுழைய முடியும்.
அதுபோல இரவு நேரத்தில் நாம் தொழக்கூடிய தராவீஹ் மற்றும் கூடுதலான இரவு வணக்கங்கள் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுபற்றி இந்த நபிமொழிகள் கூறுவதைப் பாருங்கள்:
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்: "ஒரு நாள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருகை தந்து... "முஹம்மது (ஸல்) அவர்களே! நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் ஒரு நாள் இறந்து விடுவீர்கள். நீங்கள் விரும்பியவாறு அமல் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், நீங்கள் அமல் செய்த அளவிற்கு அல்லாஹ்விடம் கூலி கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் யாரை விரும்புகின்றீர்களோ அவர்களின் மீது நேசம் கொள்ளுங்கள்! ஏனெனில், ஒரு நாள் நிச்சயம் அவர்களை விட்டும் நீங்கள் பிரிந்து விடுவீர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களே! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்! ஓர் இறை நம்பிக்கையாளனின் சிறப்பு என்பது இரவிலே நின்று வணங்குவதின் மூலம் தான் கிடைக்கிறது. ஓர் இறை நம்பிக்கையாளனின் கண்ணியம் என்பது பிற மனிதர்களிடம் இருந்தும் தேவையற்றவனாக வாழ்ந்திடும் போது தான் வழங்கப்படுகின்றது". (நூல்: தபரானீ).
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "இரவில் நின்று வணங்குவதை நீங்கள் கடைபிடித்து வாருங்கள்! ஏனெனில், அது உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லோர்கள் பலரின் சிறந்த நடைமுறையாகும். அதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தையும், பாவங்களுக்குப் பரிகாரத்தையும், தீய செயல்கள் செய்வதிலிருந்து பாதுகாப்பையும் பெறுவீர்கள்". (நூல்: இப்னு ஃகுஸைமா).
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: "எவர் இரவில் தொழுகையில் ஈடுபட்டு பத்து ஆயத்துகள் ஓதுவாரோ, அவர் அவ்விரவில் (அல்லாஹ்வை மறந்த) மறதியாளர்களில் எழுதப்படமாட்டார். எவர் நூறு ஆயத்துகளை ஓதுவாரோ, அவர் வணக்கசாலிகளின் பட்டியலில் இடம் பெறுவார். எவர் ஆயிரம் ஆயத்துகளை ஓதுவாரோ அவர் (கின்தார் - நற்செயல்களின் நன்மைகள்) குவியலுக்குச் சமமான நன்மையைப் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறுவார்". (நூல்: இப்னுஃகுஸைமா)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "சுலைமான் (அலை) அவர்களின் தாயார் தம் மகனார் சுலைமான் (அலை) அவர்களுக்கு உபதேசம் செய்கிற போது "மகனே! இரவில் அதிக நேரம் உறங்காதே! இறைவழிபாட்டில் ஈடுபடாமல் நீ உறங்குவது நாளை மறுமையில் அனைவரின் முன்பாக உன்னை வறியவனாக ஆக்கிவிடும்".
இதுபோல எண்ணற்ற சிறப்புகள் நிறைந்த ரமலானில் நாம் அதிகமாக தொழுகையில் ஈடுபடுவோம், திருக்குர்ஆன் வசனங்களை ஓதுவோம். இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்றதை வாரிவழங்குவோம், உறவுகளையும், நட்புகளையும் பேணிப்பாதுகாப்போம். இறைவனை நினைவு கூர்வதிலும், நல்ல அமல்கள் செய்வதிலும் அதிகமாக ஈடுபடுவோம். அல்லாஹ்வின் அருளையும், மன்னிப்பையும், நரக விடுதலையையும் பெறுவோம்.
மவுலவி, வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.