ராமேசுவரம் கோவிலில் நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
- மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
top
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.
மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
பின்னர் தபசு மண்டகபடியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் முடிந்து கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். எனவே நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.