வழிபாடு

அதென்ன சிதம்பர ரகசியம்?

Published On 2024-07-10 15:28 GMT   |   Update On 2024-07-11 12:39 GMT
  • பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது.
  • பஞ்ச சபைகளில் ஒன்று இந்தத் தலத்தில் அமைந்துள்ளது.

சிதம்பரம்:

பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குவது சிதம்பரம். பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜ பெருமான் உள்ளார். இதனால் இந்த ஆலயம் பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாக திகழ்கிறது.

திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அந்த வரிசையில் சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலும் இணைந்துள்ளது. இந்த ஆலயத்தை தரிசிக்க முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

பஞ்ச சபைகளில் ஒன்று இந்தத் தலத்தில் அமைந்துள்ளது. சிதம்பரம் சிற்சபையில் (பொன்னம்பலம்) நடராஜ பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


சிதம்பர ரகசியம் தெரியுமா?

சிதம்பரத்தில் இறைவன் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார். உருவம் நடராஜர், அருவுருவம் ஸ்படிக லிங்கம், அருவம் சிதம்பர ரகசியம்.

சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாசல். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வ தளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் (அருவமாக) இருக்கிறார் என்பதுதான்.

அகன்ற பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை உருவில் வழிபடுவதைவிட, வெறும் வெளியை (அருவத்தையே) இறைவனாக வழிபடுவதே சிதம்பர ரகசியமாகும்.

சிதம்பர ரகசியம்: சித்+அம்பரம்= சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேரோட்டத்தின்போது சிற்சபையில் வீற்றிருக்கும் மூலவரே, உற்சவராக மாறி தேரில் அமர்ந்து வீதி உலா வருவார். மூலவர் வெளியில் வருவது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News