பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
- பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த சாப்டூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தின் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆனி மாத பவுர்ணமி (3-ந்தேதி), நாளை (1-ந்தேதி) சனி பிரதோசத்தை முன்னிட்டு இன்று முதல் 4-ந்தேதி வரை பக்தர்கள் தசரினம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இன்று காலை மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மலையடிவாரத்தில் திரண்டனர். 7 மணியளவில் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர்.
மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். சாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. 60 வயது மேற்பட்டவர்களுக்கு மலையேற அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.
அனுமதி நாட்களில் மழை அறிகுறிகள் இருந்தால் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாளை சனி பிரதோசம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையொட்டி அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் செய்து வருகின்றனர்.