அரியும் சிவனும் ஒண்ணு என்பதை விளக்கும் ஆடித்தபசு
- ஆடி மாத பவுர்ணமியான இன்று ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- சங்கரன்கோவிலில் அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர்.
சங்கரன்கோவில்:
சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக அரியும் சிவனும் ஒண்ணு என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், சங்கரநாராயணராக தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.
இக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியான இன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இங்குள்ள கோமதி அம்மன் சன்னிதி முன், நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர்.
சங்கன் சிவபெருமான் மீதும், பதுமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தனர். இருவரும் சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என தங்களுக்குள் வாதம் செய்தனர். இது பற்றி தெரிந்து கொள்ள பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர்.
அம்பாள் ஈசனை வேண்ட, அவர் அம்பாளை பொதிகை மலைப்பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கர நாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.
அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.
சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான்.
அதேபோல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
இவ்வாறு தவம்செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் இன்று ஆடித்தபசு என கொண்டாடுகிறோம்.