வழிபாடு

சங்க கால இலக்கியங்களில் ஸ்ரீரங்கம்

Published On 2023-01-16 09:02 GMT   |   Update On 2023-01-16 09:02 GMT
  • ரெங்கநாத சுவாமி கோவிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது.
  • ராஜகோபுரம் மட்டும் 1987-ம் ஆண்டு கட்டப்பட்டது.

சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், 9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் கிடைக்கப்பெற்ற கல் வெட்டுகளே கோவிலில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜய நகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும். அது மட்டுமல்லாமல் அரசுகள் மாறினாலும், ஒவ்வொருவரும் கோவிலைப் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர்.

ரெங்கநாத சுவாமி கோவிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில், கர்நாடகாவிலுள்ள முருதேஸ்வர் கோவிலுக்கு பிறகு ஆசியாவிலேயே 3-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. எனினும் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜகோபுரம் மட்டும் 1987-ம் ஆண்டு கட்டப்பட்டது.

அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்று கொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபில மடத்தால் முழுமை பெற்றது.ரெங்கநாதசுவாமி கோவிலில் திருவுண்ணாழி திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடான் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திருவிக்கிரமன் திருச்சுற்று, கலியுகராமன் திருச்சுற்று ஆகிய 7 திருச்சுற்றுகள் அமையப் பெற்றுள்ளன. இந்த 7 திருச்சுற்றுகளுக்குள்ளே தென்திசை நோக்கி கருவறையில் பள்ளி கொண்டுள்ளார் ரெங்கநாதர்.

Tags:    

Similar News