வழிபாடு

வெள்ளை கோபுரமும்... தியாக வரலாறும்...

Published On 2023-01-03 08:53 GMT   |   Update On 2023-01-03 08:53 GMT
  • இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம்தான்.
  • இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது.

நம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வரும் பக்தர்கள் அனைவரையும் முதலில் வரவேற்பது வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமாக காட்சியளிக்கும் 236 அடி உயர ராஜகோபுரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்த ராஜகோபுரத்தை விட வரலாற்று சிறப்புமிக்கது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்குப்பகுதியில் உள்ள வெள்ளை கோபுரம்.

இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே? இது ஏன்? என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெற்கு கோபுரமான ராஜகோபுரம் 1987-ம் ஆண்டு அகோபில மடம் ஜீயரால் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுவரை இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம்தான். இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது.

முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் அன்னிய படையெடுப்புகளால் ஸ்ரீரங்கம் கோவில் பலமுறை சூறையாடப்பட்டு பொன் பொருள் எல்லாம் அன்னிய படையினரால் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இருக்கிறது என்பது வரலாறு. அந்த வரலாற்றுடன் இணைந்தே இந்த வெள்ளை கோபுரத்தின் வரலாறும் உள்ளது. அதாவது 15-ம் நூற்றாண்டு கால கட்டத்தில், அப்போது மதுரையை ஆண்ட சுல்தான் படைகள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிப்பதற்காக வந்தன. தேவையான பொன் பொருள் எல்லாம் அகப்பட்ட பின்னரும், அந்த படையின் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டுச்செல்ல மனமில்லை. அதற்கு காரணம் காவிரிக்கரையில் அமைந்துள்ள இயற்கை அழகு அல்ல. அவன் மனதில் இக்கோவிலில் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் இன்னும் ஏராளம் இருக்கும். அவற்றையும் கவர்ந்த பின்னரே இங்கிருந்து செல்ல வேண்டுமென திட்டமிட்டான்.

இதற்காக ஒரு நாள் அல்ல பல நாள் தனது படையுடன் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டான். ஆனால் அவன் நினைத்த பொக்கிஷம் அவன் கண்களில் எளிதாக சிக்கவில்லை. இந்த நிலையில் அன்னிய படைகளின் ஆதிக்கத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஸ்ரீரங்கம் வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த சிரமத்தை கண்டு மனம் பொறுக்காத வெள்ளையம்மாள் என்ற பெண் வெகுண்டு எழுந்தாள். இந்த வெள்ளையம்மாள் வேறு யாரும் அல்ல, கோவிலில் நடனமாடி திருப்பணி செய்து வந்தவர் தான்.

அரங்கன் மேல் உள்ள அளவற்ற பற்றின் காரணமாக, பேராசை கொண்ட தளபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று திட்டமிட்டார் வெள்ளையம்மாள். பெண்ணாசை பிடித்த அந்த தளபதி வெள்ளையம்மாளிடம் நெருங்கி பழகினான். அந்த நெருக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வெள்ளையம்மாள் ஒருநாள் தளபதியிடம் ரகசியமாக பேசினாள். அப்போது, நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

நான் உங்களுக்கு அதை காட்டுகிறேன் வாருங்கள் என்று வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு கையோடு அழைத்து சென்றாள். விலைமதிப்பற்ற பொக்கிஷம் இன்னும் சற்று நேரத்தில் தனக்கு கிடைக்கப்போகிறது என்ற பேராசையில், அவனும் பின் தொடர்ந்து படிகளில் ஏறினான். வெள்ளை கோபுரத்தின் உச்சியை அடைந்ததும் வெள்ளையம்மாள் அந்த தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிட்டாள். இதில் மண்டை உடைந்து நொறுங்கி தளபதி ஒழிந்தான். ஆனால் அவன் படைகள் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று கருதிய வெள்ளையம்மாள் மேலே இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதுதான் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு.

அரங்கனின் பொக்கிஷத்தை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாகவே, வெள்ளையம்மாளின் தியாகத்தை உணர்த்துவதாக, அந்த கோபுரம் இன்றுவரை வெள்ளை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.

Tags:    

Similar News