வழிபாடு

சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் 19-ந்தேதி தேரோட்டம்

Published On 2023-04-12 08:03 GMT   |   Update On 2023-04-12 08:03 GMT
  • சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு நித்தியல் கோஷ்டியும் நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் கொடிபட்டம் நான்கு மாடவீதிகளில் சுற்றிவரப்பட்டது.

10.30 மணிக்கு தங்கத் தோளுக்கினியானில் சுவாமி கள்ளபிரான் திருவீதி உலா நடைபெற்றது. 10.45மணிக்கு வேதபாராயணம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, தேவராஜன், திருவேங்கடத்தான், கண்ணன், ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

11.45 மணிக்கு மனவாள மாமுனி சன்னதியில் நாலாயிர திவ்ய பிரபந்தம், தீர்த்த வினியோக கோஷ்டியும் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், 7 மணிக்கு தங்க தோளுக்கினியானில் சுவாமி கள்ளபிரான் வீதி புறப்பாடும் நடந்தது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும், தங்க மசகிரியில் திருமஞ்சனம், தீர்த்தவாரி வினியோக கோஷ்டியும், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், ஷேச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

5-ம் திருநாளான காலை 9.30 மணிக்கு கள்ளபிரான், ஸ்ரீ காசினி வேந்தபெருமாள், விஜயாசனபெருமாள், சுவாமிகள் நம்மாழ்வார் மங்களாசாசனமும் நடைபெறுகிறது. கோவிலில் இருந்து கருட வாகனத்தில் நான்கு சுவாமிகளும் புறப்பட்டு இரவு 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் மேடைப் பிள்ளையார் கோவில் முன்பு கருடவாகனங்களில் கள்ளபிரான் சுவாமி, ஸ்ரீ பொலிந்து நின்ற பெருமாள், ஸ்ரீ காசினிவேந்த பெருமாள், விஜயாசன பெருமாள் சுவாமிகள் 4 கருட வாகனத்தில் குடைவரை பெருவாயில் ஹம்ஸ வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர் சேவை நடக்கிறது.

விழாவின் சிகர நாளான 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு பெருமாள் கொடிமரம் சுற்றி எழுந்தருளலும், 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளலும், 9.10 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலுடன் தேரோட்டமும் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

10-ம் திருநாளான காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு வெற்றிவேர் சப்பரத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாள் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

Tags:    

Similar News