வழிபாடு

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்ற பக்தர்கள்.




ஆருத்ரா தரிசனம்: மண்ணடியில் 9 கோவில்களை சேர்ந்த நடராஜர் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2023-01-06 05:33 GMT   |   Update On 2023-01-06 05:33 GMT
  • சிவன் கோவில்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
  • அனைத்து நடராஜர்களுக்கும் ஒரே இடத்தில் மகா ஆரத்தி காட்டப்பட்டது.

மார்கழி மாதம் பவுர்ணமி யோடு, திருவாதிரை நட்சத் திரம் கூடி வரும் நாளன்று 'திருவாதிரை' திருவிழா 'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபடும் நாள் ஆகும்.

அந்த வகையில் சிவன் கோவில்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. சென்னையில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

திருவாதிரை விழாவையொட்டி சிவன் அடையாறு சேவா சங்கம் சார்பில் 'திருவாதிரை நவ நடராஜர் சந்திப்பு' நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. சென்னை மண்ணடி முத்தியால்பேட்டை லிங்க செட்டி தெரு மல்லிகேஸ்வரர் கோவில் எதிரில் இந்த திருவாதிரை சந்திப்பு விழா நடந்தது.

இதில் 9 கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நடராஜர் உற்சவர் ஒரே இடத்தில் சந்தித்தனர்.

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், சென்னை காளி காம்பாள் கோவில், மூக்கர் செல்லமுத்து பிரசன்ன விநாயகர் கோவில், செங்கழுநீர் பிள்ளையார் கோவில், மண்ணடி செல்வ விநாயகர் கோவில், முத்துக்குமாரசாமி கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், சண்முக செல்வ விநாயகர் கோவில் ஆகிய 9 கோவில்களில் உள்ள நடரா ஜர் உற்சவர் இங்கு கொண்டு வரப்பட்டு அனைவரும் சாலையின் நான்கு பக்கங்களிலும் நின்றனர்.

இந்த அனைத்து நடராஜர்களுக்கும் ஒரே இடத்தில் மகா ஆரத்தி காட்டப்பட்டது. அப்போது வேதபாராயணம் மற்றும் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி நடந்தது. மேலும் திருவாசகமும் பாடப்பட்டது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகள் முழு வதும் நடராஜர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நாளை (7-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நடராஜ பெருமான் ஆருத்ரா உள் உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை நடராஜர் மற்றும் தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை தியாகராஜர் அறைக்கட்டு மாடவீதி புறப்பாடு, 18 திருநடனம் நடைபெறுகிறது.

கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீசுவரர் கோவிலில் நேற்று இரவு 10 மணிக்கு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு அலங்காரம், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் சாமி புறப்பாடு மற்றும் மாட வீதி உலா நடந்தது.

வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நடராஜர்-சிவகாம சுந்தரி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. காலையில் அஷ்டோத்ர அர்ச்சனை, மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இன்று மாலை நடராஜர் சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ் பாஞ்சலி நடைபெறுகிறது.

மேலும் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

Tags:    

Similar News