தைப்பூசம்: பழனி முருகன் கோவிலில் தேரோட்டம்
- சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
- விண்ணையே பிளக்கும் வகையில் அரோகரா... சரணகோஷம்
பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
தேரோட்டத்தையொட்டி முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாள் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.
பின்னர் பகல் 11.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் தேர்கட்டி மண்டபத்திற்கு வந்தார். பகல் 12 மணிக்கு திருத்தேரில் சாமி எழுந்தருளினார்.
தேரோட்டம்
மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா...!" என்று சரண கோஷம் எழுப்பினர். இதனால் விண்ணையே பிளக்கும் வகையில் சரணகோஷம் முழங்கியது.
தொடர்ந்து நிலையில் இருந்து பெரிய தேர் புறப்பட்டு கிழக்கு, தெற்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரின் பின்னால் கோவில் யானை கஸ்தூரியும் நடந்து வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.