வழிபாடு

கொடியேற்றம் நேற்று இரவு நடந்தபோது எடுத்த படம்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2023-03-30 03:24 GMT   |   Update On 2023-03-30 03:24 GMT
  • 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.
  • 8-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா நேற்று இரவு தொடங்கியது. முன்னதாக காலையில் நவசக்தி ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நிகழ்ச்சியும், மூலவர் பிரகாரத்தில் உற்சவ அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து 10.30 மணியளவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டி விரதம் இருக்க தொடங்கினர். விழாவையொட்டி இன்று இரவு சிம்ம வாகனத்திலும், தொடர்ந்து குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரும் 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.

அன்றைய தினம் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் கோவிலுக்கு வர முடியாதவர்கள் கோவில் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறார். மறுநாள் 6-ந்தேதி இரவு மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

7-ந்தேதி பக்தர்கள் பால்குடம், அக்னி மற்றும் அலகு குத்துதல், அங்க பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 5.50 மணிக்கு ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும், இரவு 10.20மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 8-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடடேசன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News