வழிபாடு

திருவையாறில், நாளை ஆடி அமாவாசை அப்பர் கயிலைக்காட்சி விழா

Published On 2022-07-27 06:31 GMT   |   Update On 2022-07-27 06:31 GMT
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பர் கயிலாயக்காட்சியை கண்டு தரிசனம் செய்து செல்வார்கள்.
  • நாளை மதியம் திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பர் கயிலை காட்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அப்பர் கயிலாயக்காட்சியை கண்டு தரிசனம் செய்து செல்வார்கள்.நாளை காலை ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை தரிசித்து ஆலயத்தில் வழிபட்டு செல்வார்கள். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.

இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலைக்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் ஆசியுடன் கோவில் நிர்வாகிகள் அகோரமூர்த்தி, ஆனந்தன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

இந்தநிலையில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சாமி புறப்படும் இடம், கயிலைக்காட்சி நடக்கும் இடம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா். மேலும் மின்விளக்குகள், சுகாதாரம், குடிநீர், அவசர சிகிச்சை உதவி ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை உதவி போன்றவையை கேட்டறிந்த பிறகு பாதுகாப்பை உறுதி செய்தனர்.

Tags:    

Similar News