வழிபாடு

சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா:சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை

Published On 2023-03-02 06:30 GMT   |   Update On 2023-03-02 06:33 GMT
  • 4-ந்தேதி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதியுலா நடக்கிறது.
  • தேரோட்டம் 6-ந்தேதி நடக்கிறது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது. இரவில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளினர். தொடர்ந்து பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

அப்போது கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தங்க மயில் வாகனங்களில் எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

6-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News