வழிபாடு

மரகோபுர சிற்பங்களுக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலயம், பந்தல்கால் நடும் விழா

Published On 2023-02-17 03:30 GMT   |   Update On 2023-02-17 03:30 GMT
  • சிறப்பு யாகங்கள், பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.
  • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை மேம்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக திருப்பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக கோவில் கிழக்கு கோபுரம் மற்றும் சண்முகவிலாச மண்டப நுழைவுவாயிலான சாலகோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கான பாலாலயம் மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று காலையில் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு உள்பிரகாரத்தில் உள்ள யாகசாலையில் வைக்கப்பட்ட கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானதளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பந்தல்கால் நடப்பட்டது.

தொடர்ந்து மரகோபுர சிற்பங்களுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டு, மீண்டும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு சிறப்பு யாகங்கள், பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. அதன்பிறகு மரகோபுர சிற்பங்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட கும்பநீரால் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News