வழிபாடு

பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு விலை உயர்ந்த குங்குமப்பூ மாலைகள் அணிவிப்பு

Published On 2022-10-06 04:19 GMT   |   Update On 2022-10-06 04:19 GMT
  • குங்குமப்பூவால் மாலைகள், கிரீடங்கள் தயார் செய்யப்பட்டன.
  • ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை சுமார் ரூ.2 லட்சம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாகனச் சேவை முடிந்ததும் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கும். ஆனால், இந்த முறை பிரம்மோற்சவ விழாவின்போது, உற்சவர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

வண்ணமயமான ஆர்க்கிட் மலர்களாலும், தாமரைகளாலும் மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஸ்நாபன திருமஞ்சனத்தில் சுகந்த திரவியங்கள் பயன்படுத்தப்பட்டது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் உலர்ந்த பழங்கள், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா மாலைகள், உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட கிரீடங்கள் உற்சவர்களுக்கு அணிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த காணிக்கையாளர்கள் ஐதராபாத்தில் இருந்து அலங்கார நிபுணர்களை வரவழைத்து கோவிலில் ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தும் ரெங்கநாயகர் மண்டபத்தை அலங்கரித்தனர். ஸ்நாபன திருமஞ்சனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஜப்பான் ஆப்பிள்கள், சின்னத் திராட்சை, கொரியன் பேரிக்காய், மாம்பழங்கள், அமெரிக்க செர்ரி பழங்கள், குங்குமப்பூ, பிஸ்தா, பாதாம் மாலைகளை பிரத்யேகமாக தயாரித்து அணிவித்து உற்சவர்கள் அலங்கரித்தனர்.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சீனிவாசுலு கூறியதாவது:-

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் சிறப்பு அம்சமாக, முதல் முறையாக குங்குமப்பூவால் மாலைகள், கிரீடங்கள் தயார் செய்யப்பட்டன. ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை சுமார் ரூ.2 லட்சம். அதன் மூலம் ஒரு மாலை தயாரிக்க சுமார் 3 கிலோ வரை குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் குங்குமப்பூ மாலைகளை ஐதராபாத்தைச் சேர்ந்த அம்பிகா புளோரா நிறுவனம், தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த காணிக்கையாளர்களான ராஜேந்திரன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் காணிக்கையில் தயார் செய்யப்பட்டன.

அம்பிகா பிளோராவின் தலைவர் சீனிவாஸ் வழிகாட்டுதலின் கீழ் சுமார் 60 பேர் திருமலைக்கு வந்து இரவும் பகலும் கடுமையாக உழைத்து, வாசனை திரவியங்கள் மற்றும் உலர் பழங்களால் இந்த மாலைகளை தயார் செய்தனர்.

அதேபோல் அத்திப்பழம், நாவல் பழம், பிஸ்தா, பாதாம், ஏலக்காய், சோளம் போன்றவற்றைக் கொண்டு மாலைகளும், கிரீடங்களும் தயார் செய்யப்பட்டன. ஸ்நாபன திருமஞ்சனத்தில் 7 வகையான மாலைகள், கிரீடங்கள் மற்றும் இறுதியாக துளசி மாலைகளை பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News