வழிபாடு

திருமலை வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை

Published On 2022-11-05 05:27 GMT   |   Update On 2022-11-05 05:27 GMT
  • விஷ்ணு சாளக்கிராம பூஜை, சங்கல்பம் மற்றும் பிரார்த்தனை சூக்தம் தொடங்கியது.
  • ஷம மந்திரம் மற்றும் மங்கள ஆரத்தியுடன் விஷ்ணு சாளக்கிராம பூஜை முடிந்தது.

தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை விஷ்ணு சாளக்கிராம பூஜை நடந்தது. அதற்காக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் சாளக்கிராம கற்களும் எடுத்துச் செல்லப்பட்டன.

திருமலை-திருப்பதி தேவஸ்தான வைகானச ஆகம ஆலோசகர் மோகனராங்காச்சாரிலு இந்தப் பூஜையின் பலன்களை தெரிவித்தார். 100 அஸ்வ மேத யாகங்கள் செய்த பலன் கிடைத்து, பிறவியில்லா முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதைத்தொடர்ந்து முதலில் விஷ்ணு சாளக்கிராம பூஜை, சங்கல்பம் மற்றும் பிரார்த்தனை சூக்தம் தொடங்கியது. பின்னர் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத அர்ச்சகர்கள் சாளக்கிராம கற்களுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். விஷ்ணு அஷ்டோத்திர சதநாமாவளியை பாராயணம் செய்தனர். அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கும், சாளக்கிராம கற்களுக்கும் ஆரத்தி எடுத்தனர். அதில் பங்கேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவாக ஷம மந்திரம் மற்றும் மங்கள ஆரத்தியுடன் விஷ்ணு சாளக்கிராம பூஜை முடிந்தது.

அதில் கோவில் பிரதான அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், தர்மகிரி வேதப் பள்ளி, தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News