திருப்பரங்குன்றத்தில் இரண்டு முருகன் இரண்டு தெய்வானை புறப்பாடு நிகழ்ச்சி
- அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
- சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.
திருப்பரங்குன்றம்:
தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.
இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.