உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவை 2-ந்தேதி நடக்கிறது
- 3-ந்தேதி கண்ணாடி அறை சேருதல் நடக்கிறது.
- சேர்த்தி சேவை நிகழ்ச்சி இரவு 12 மணி வரை நடைபெறுகிறது.
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உற்சவர் நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை சாதிப்பது வழக்கம். அந்த வகையில் சேர்த்தி சேவைக்காக வருகிற 2-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணியளவில் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் வந்தடைகிறார்.
காலை 11 மணிக்கு மகாஜன உபய மண்டபம் சேருகிறார். பகல் 12 மணிக்கு முன் மண்டபம் சேருகிறார். 1.15 மணிக்கு முன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபம் சேர்ந்து, அங்கு அழகிய மணவாளப் பெருமாளாக காட்சி அளிக்கும் அவர், 2 மணி முதல் தாயாருடன் சேர்த்தி சேவைக்காக எழுந்தருளுகிறார். சேர்த்தி சேவை நிகழ்ச்சி இரவு 12 மணி வரை நடைபெறுகிறது.
3-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு சேர்த்தி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறை சேருதல் நடக்கிறது.மூலஸ்தான சேவை காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி, பகல் 1.15 மணி முதல் மாலை 5.30 மணி, மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. பூஜா காலம் பகல் 12.30 மணி முதல் 1.15 மணி, மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சேவை இல்லை.