இன்று வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பால் அபிஷேகம்
- இன்று வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
- அதிகாலை 6 மணி முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான விசாக திருவிழா, கடந்த மே 24-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து அங்கு நீர் நிரப்ப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளினார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.
10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினர்.
அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வைகாசி விசாகத்தையொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் பாத யாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விசாகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு அதிக அளவு வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு மற்றும் கோவில் வாசல் பகுதியில் முழுவதும் தேங்காய் நார் விரிப்புகள் போடப்பட்டிருந்தது.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிகாலை 6 மணி முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முருகனின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலிலும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையடிவாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் நீராடி பின்னர் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் மற்றும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி கோவில், பூங்கா முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.