வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
- அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளான இன்று விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையாகி சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வருகிறார். அங்கு முக்கிய நிகழ்ச்சியான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடக்கிறது.
தொடர்ந்து மகா தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
வைகாசி விசாகத் திருவிழாவில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்து கடலில் புனித நீராடி அரோகரா கோஷம் முழங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் விண்ணதிர அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.