வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் தொடங்கியது

Published On 2024-04-22 05:44 GMT   |   Update On 2024-04-22 06:11 GMT
  • 3 நாட்கள் நடக்கும் வசந்தோற்சவம் நேற்று காலை தொடங்கியது.
  • உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாட்கள் நடக்கும் வசந்தோற்சவம் நேற்று காலை தொடங்கியது.

வசந்தோற்சவத்தை நடத்த கவர்ச்சியான மண்டபம் அமைக்கப்பட்டது. அந்த மண்டபம் சப்தகிரியை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகிறது.

அதில், திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சீனிவாஸ் வழிகாட்டுதல் படி சேஷாசலம் வனப்பகுதியைப்போல் வடிவமைக்கப்பட்டது. அதற்காக 250 கிலோ வெட்டிவேர், 600 கிலோ பாரம்பரிய மலர்கள், 10 ஆயிரம் கொய்மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பச்சை மரங்கள், பலவண்ணப்பூக்கள் மற்றும் புலிகள், சிறுத்தைகள், குரங்குகள், நரிகள், மலைப்பாம்புகள், நல்ல பாம்புகள், மயில்கள், வாத்துகள், அன்னப்பறவைகள், மைனாக்கள், கிளிகள், ஒட்டகங்கள் எனப் பல்வேறு வகையான விலங்குகளின் உருவப்பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து நேற்று காலை நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக் கொண்டு வந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஆஸ்தானமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

முதலில் விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. பின்னர் சத்ர சாமர வியாஜன தர்பணாதி, நைவேத்தியம், தூப பிரசாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது வேதப் பண்டிதர்கள் புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்ய பிரபந்த பாசுரங்களை ஓதினார்கள். வசந்தோற்சவம் முடிந்ததும் மாலை வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News