மரடோனாவுக்கு அஞ்சலி: 30 ஆண்டு பயணம் குறித்த வீடியோவை வெளியிட்ட மெஸ்சி
- மரடோனாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் சில வரிகளை தெரிவித்து உள்ளார்.
- 1993-ம் ஆண்டு தனது 6-வது வயதில் கால்பந்து ஆட ஆரம்பித்தது முதல் தற்போதையை உலக கோப்பையை வென்றது வரை உள்ள சிறப்புகளை மெஸ்சி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பியுனஸ் அயர்ஸ்:
கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதி போட்டியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப்பையை வென்று உள்ளது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டுகளில் சாம்பியன் ஆகி இருந்தது. மரடோனாவுக்கு பிறகு லியோனல் மெஸ்சி அந்நாட்டுக்காக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றிய தால் அந்நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது. அணியின் வெற்றியை திருவிழா போல் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். அவர்களுக்கு மிகவும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் பெரும் திரளாக பங்கேற்று தங்கள் நாட்டு நாயகர்களை வாழ்த்தி கோஷ மிட்டனர். திறந்த பஸ்சில் சென்ற அவர்களுக்கு சாலையின் இரு புறத்தில் இருந்தும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
இந்த உற்சாகமான வரவேற்பில் அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் திக்கு முக்காடி விட்டனர். நாடு முழுவதும் இந்த வெற்றி கொண்டாட்டம் இருந்தது.
உலக கோப்பையை வென்றதன் மூலம் மெஸ்சியின் கனவு நனவாகி உள்ளது. இதன் மூலம் கால்பந்தின் அனைத்து காலக்கட்டத்திலும் தான் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து காட்டி விட்டார்.
இந்த நிலையில் லியோனல் மெஸ்சி தனது 30ஆண்டுகள் பயணத்தை குறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கால்பந்து உலகில் மெஸ்சியின் புகழ் பெற்ற பயணம், சமீபத்தில் அதன் உச்சத்தை எட்டியது உள்ளிட்ட எல்லா அம்சங்களும் வீடியோவில் இருக்கிறது.
1993-ம் ஆண்டு தனது 6-வது வயதில் கால்பந்து ஆட ஆரம்பித்தது முதல் தற்போதையை உலக கோப்பையை வென்றது வரை உள்ள சிறப்புகளை மெஸ்சி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் கால்பந்து ஜாம்பவனான டியாகோ மரடோனாவுக்கும் அவர் அஞ்சலியும் செலுத்தி உள்ளார். மரடோனாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் சில வரிகளை தெரிவித்து உள்ளார். மனதை கவரும் தலைப்பையும் அதில் பதிவிட்டுள்ளார்.
மெஸ்சி இந்த வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.