யூரோ கோப்பை.. செக் குடியரசை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி
- கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
- செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்தது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெற்ற க்ரூப் எஃப் பிரிவு போட்டியில் போர்ச்சுகல் மற்றும் செக் குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியில் போர்ச்சுகல் நாட்டின் இளம் வீரர் பிரான்சிஸ்கோ கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
21 வயதான போர்ச்சுகல் வீரர் எல்லை கோட்டின் அருகில் வைத்து அடித்த ஷாட்-ஐ செக் குடியரசு வீரர்களால் சரியாக தடுக்க முடியாமல் போனது. இது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த வெற்றி மூலம் போர்ச்சுகல் அணி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.
துவக்கம் முதலே போர்ச்சுகல் அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. எனினும், போராடிய செக் குடியரசு வீரர்கள் கடும் போட்டியை ஏற்படுத்தினர். கிடைக்கும் இடங்களில் கோல் அடிக்கும் முயற்சியில் செக் குடியரசு வீரர்கள் ஈடுபட்டனர். இதன் பலனாக போட்டியின் 60-வது நிமிடத்தில் செக் குடியரசு அணி ஒரு கோல் அடித்தது.
இதைத் தொடர்ந்து செக் குடியரசு வீரர் ராபின் ரனாக் செய்த தவறு காரணமாக எதிரணிக்கு ஒரு கோல் கிடைத்தது. இரு அணிகளும் ஒரு கோல் என்ற நிலைக்கு வந்ததும், போட்டி சமனில் முடிய கூடாது என்ற எண்ணத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர்.
பிரபல வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 6-வது யூரோ கோப்பை தொடரில் களமிறங்கி விளையாடி வருகிறார். எனினும், நேற்றைய போட்டியில் அவரது ஷாட்கள் எதையும் கோலாக மாறாமல் எதிரணி கோல் கீப்பர் ஜின்ட்ரிச் ஸ்டானெக் பார்த்துக் கொண்டார். இதனால் போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.
இதையடுத்து இரு அணி வீரர்களும் தங்கள் அணிக்கு ஒரு கோல் அடிக்க போராடினர். எனினும், போர்ச்சுகல் அணியின் கான்சிகாவோ அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியை கொடுத்தது.