கால்பந்து

யூரோ கோப்பை: சாம்பியன் ஸ்பெயின் அணி படைத்த சாதனைகள்

Published On 2024-07-15 01:59 GMT   |   Update On 2024-07-15 01:59 GMT
  • எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பை வென்றதில்லை.
  • யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று முடிந்தது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று யூரோ கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. முன்னதாக 2020 ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

 


தற்போது நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இருமுறை யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியாக இங்கிலாந்து உள்ளது.

நடைபெற்று முடிந்த 2024 யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச அளவில் (யூரோ/ உலகக் கோப்பை) ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.

முன்னதாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி இதே போன்று ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் அணி நடந்து முடிந்த யூரோ கோப்பை தொடரில் 15 கோல்களை அடித்துள்ளது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் ஒரே தொடரில் இத்தனை கோல்களை அடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News