ஐரோப்பிய கோப்பை கால்பந்து: ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்
- ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது.
- போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.
கொலோன்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
சுலோவாக்கியா அணிக்காக 25-வது நிமிடத்தில் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்தார். ஆட்டம் நிறைவடையும் தருவாயில் இங்கிலாந்துக்காக பெல்லிங்காம் கோல் அடித்தார். கடைசி நிமிட கோலால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.
இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி கால்இறுதியில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
ஸ்பெயின் அணியில் ரோட்ரி (39-வது நிமிடம்), ரூயிஸ் (51), வில்லியம்ஸ் (75), ஒல்மோ(91) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நார்மென்ட் அடித்த சுயகோலால் ஜார்ஜியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது.
ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.