மெஸ்சி உலக கோப்பையை வெல்வார்- 7 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த அர்ஜென்டினா பயண ஆர்வலர்
- கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
- என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.
கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ, ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.