கால்பந்து

ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய கால்பந்து அணிகளுக்கு விளையாட்டு அமைச்சகம் அனுமதி

Published On 2023-07-27 04:53 GMT   |   Update On 2023-07-27 04:53 GMT
  • சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
  • ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

புதுடெல்லி:

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு குழு போட்டியில் பங்கேற்க ஆசிய அளவில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகளுக்கு தான் அனுமதி அளிக்க வேண்டும் என்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிபந்தனையாகும். இதனால் ஆசிய தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய ஆண்கள் கால்பந்து அணி, 11-வது இடத்தில் இருக்கும் இந்திய பெண்கள் கால்பந்து அணி ஆகியவற்றுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குரும் தலையிட்டு இந்திய கால்பந்து அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் உள்பட பலரும் வற்புறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் அணிகள் பங்கேற்பதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி இந்திய கால்பந்து அணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நேற்று மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வருகிற ஆசிய விளையாட்டு போட்டியில் நமது தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி தகுதி பெறாத இவ்விரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கால்பந்து அணிகளுக்கு விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கி இருப்பதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே, பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News