கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து - தகுதிச்சுற்றில் இந்தியா - குவைத் இன்று மோதல்

Published On 2024-06-06 02:08 GMT   |   Update On 2024-06-06 02:08 GMT
  • கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
  • இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

கொல்கத்தா:

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இந்த போட்டி தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொள்கிறது.

இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் ஏற்கனவே இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியிருந்த குவைத் அணி அதற்கு பதிலடி கொடுக்க கடுமையாக முயற்சிப்பார்கள்.

இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

39 வயதான சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அதிக கோல்கள் (94 கோல்) அடித்தவர் ஆவார். போட்டி குறித்து அவர் கூறுகையில் 'இது என்னை பற்றியோ எனது கடைசி ஆட்டத்தை பற்றியோ கிடையாது. எனது ஓய்வு குறித்து நான் மீண்டும், மீண்டும் பேச விரும்பவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்களது முதன்மையான நோக்கம். அது எளிதாக இருக்க போவதில்லை. ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எங்களுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய (இன்று) ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் ஏறக்குறைய 3-வது சுற்றுக்கு தகுதி பெற்று விடுவோம். நான் ஓய்வு பெற்றாலும், இந்திய அணியின் அடுத்த சுற்று ஆட்டங்கள் எங்கு நடந்தாலும் நேரில் சென்று ஊக்கப்படுத்துவேன்' என்றார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கருத்து தெரிவிக்கையில், 'எனது ஒட்டுமொத்த விளையாட்டு மற்றும் பயிற்சியாளர் வாழ்க்கையில் இது மிகப்பெரிய தருணமாகும்.

150 கோடி இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்ய எங்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். அதனை நிறைவேற்ற நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அது இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், குவைத் 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

Tags:    

Similar News