பொது மருத்துவம்

நாள் முழுவதும் ஏ.சி. ரூமில் இருப்பவரா நீங்கள்....உஷார்

Published On 2024-05-12 06:08 GMT   |   Update On 2024-05-12 06:08 GMT
  • வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

அலுவலகங்கள் மட்டுமின்றி வீடுகளிலும் தவிர்க்க முடியாத மின்சாதனப் பொருட்களுள் ஒன்றாக ஏ.சி. விளங்குகிறது. கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் பலரும் ஏ.சி. உபயோகிக்க விரும்புகிறார்கள்.

அது கோடை வெயிலுக்கு இதமளித்தாலும் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். சரும பாதிப்பு முதல் சுவாசக்கோளாறுகள் வரை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். ஏ.சி.யை அதிகம் பயன்படுத்துவதால் அனுபவிக்கும் 8 இன்னல்கள் குறித்து பார்ப்போம்.

உலர் சருமம்

ஏர்கண்டிஷனர்கள் காற்றில் நிலவும் இயற்கையான ஈரப்பதத்தை நீக்கிவிட்டு செயற்கை குளிர் காற்றை உமிழும் தன்மை கொண்டவை. அவை சருமத்தில் அதிக நேரம் படர்ந்தால் சரும வறட்சி, சரும அரிப்பு ஏற்படக்கூடும்.

அதனால் குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருந்தால் காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்யும் 'ஹூமிடிபையர்' போன்ற ஈரப்பதமூட்டும் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது.

சுவாச பிரச்சினை

தூசு, நுண் துகள்கள், மாசுபட்ட காற்றில் கலந்திருக்கும் கிருமிகள் ஏ.சி. மூலம் பரவி ஒவ்வாமையையும், சிலருக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சினைகளையும் அதிகரிக்கச் செய்துவிடும்.

அதனால் ஏ.சி.யில் பொருத்தப்பட்டிருக்கும் பில்டர்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். அதன் மூலம் அறைக்குள் காற்றின் தரத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

வறண்ட கண்கள் - தொண்டைப்புண்

ஏ.சி. பயன்படுத்தப்படும் அறைக்குள் நிலவும் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சிலருக்கு கண்கள் மற்றும் தொண்டையில் வறட்சி ஏற்படலாம். அப்படி கண்கள் வறண்டு போனால் மருத்துவரின் ஆலோசனை பெற்று கண் சொட்டு மருந்துகளை உபயோகிக்கலாம்.

நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இந்த அறிகுறிகளை குறைக்கலாம். காற்றில் ஈரப்பதத்தை நிலையாக தக்கவைக்க 'ஹூமிடிபையர்' போன்ற ஈரப்பதமூட்டும் சாதனங்களை பயன்படுத்துவதுதான் சரியான தீர்வாகவும் அமையும்.

சோர்வு - தலைவலி

ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் குளிர்ந்த காற்று சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் தலைவலி, சோர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள் ஏ.சி.யில் படிப்படியாக வெப்பநிலையை உயர்த்துவதன் மூலமும், கை விசிறி பயன்படுத்துவதன் மூலமும் பாதிப்புகளை குறைக்கலாம்.

 சளி தொந்தரவு

ஏர் கண்டிஷனரில் நீண்ட நேரம் இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை சிலருக்கு ஏற்படுத்தலாம். ஏனெனில் ஏ.சி. மூலம் அறைக்குள் நிலவும் குளிர் சூழலில் நோய் பரப்பும் கிருமிகள் உலவும். அவை எளிதில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும். அதனால் ஏ.சி. அறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

இறுக்கமான தசைகள்

குளிர்ச்சியான சூழலில் நீண்ட நேரம் உட்காருவது அல்லது தூங்குவது தசைகளை இறுக்கமடைய செய்யும். மூட்டுக்கு அசவுகரியம் அளிக்கும். குறிப்பாக கீல்வாதம் போன்ற மூட்டு சார்ந்த பிரச்சினை உடையவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும்.

இரவில் ஏர்கண்டிஷனர் உபயோகிக்கும்போது அதில் வெப்பநிலையை அதிகரிக்க செய்யலாம். அல்லது போர்வை போர்த்தி சருமத்தை பாதுகாக்கலாம்.

நீரிழப்பு

ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் குளிர்ந்த காற்று தொடர்ந்து உடலில் படும்போது குளிர்ச்சியை உணருபவர்கள் அதிகம் தண்ணீர் பருக தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இது நீரிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

அதிலும் கோடை காலத்தில் ஏ.சி. அறையில் அதிக நேரத்தை செலவிடும் பட்சத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் உடல் நீரேற்றமாக இருப்பதற்கு உதவி புரியும்.

தூக்கக்கோளாறு

ஏர் கண்டிஷனர்களால் உற்பத்தி செய்யப்படும் குளிர் காற்று சூழலில் தூங்குவது சிலருக்கு அசவுகரியத்தை அளிக்கலாம். போர்வைகள் அல்லது சவுகரியமாக தூங்குவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவதன் மூலமும், படுக்கை அறையில் சீரான வெப்பநிலையை பராமரிப்பதன் மூலமும் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

Tags:    

Similar News