இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்...? உஷார்...!
- சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம்.
- 50 சதவிகிதம் பேருக்கு இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினை உள்ளது.
இரவில் பல முறை சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களில், 50 சதவிகிதம் பேர், இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாலை அல்லது இரவு நேரங்களில், அதிக திரவ உணவுகள், காபி, மது ஆகியவற்றை உட்கொண்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். மேலும், வயதானவர்களுக்கு இரவில் ஆன்ட்டி டையூரிட்டிக் ஹார்மோன் வெளியீடு குறைவதால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடலாம்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத காரணங்களில், கீழ்கண்டவை முக்கியமானவையாக கருதப்படுகிறது.
1) புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் (புரோஸ்டேட்ஹைபர்பிலேசியா),
2) வயது முதிர்வின் காரணமாக சிறுநீர்ப்பையின் திறன் குறைதல்,
3) நீர்பை அழற்சி, கற்கள் அல்லது தொற்று,
4) சிறுநீர் பாதையில் தொற்று அல்லது கற்கள்,
5 மன அழுத்தம் அல்லது மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,
6) இதய செயலிழப்பு,
7) கல்லீரல் செயலிழப்பு.
நீங்கள் ரத்த கொதிப்பிற்கு காலை மற்றும் இரவில் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதன் பக்க விளைவாக கூட சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடலாம். ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டையூரிட்டிக்ஸ் (தையாசைடு), கால்சியம் சானல் பிளாக்கர்ஸ் (அம்லோடிப்பின்), அஞ்ஜியோடென்சின் கன்வர்டிங் என்சைம் இன்ஹிப்ட்டாஸ் (எனலாப்பிரில்) ஆகிய மருந்துகளின் பக்கவிளைவுகளால் கூட சிறுநீர் அடிக்கடி கழிக்கக் கூடும்.
இதற்கு தீர்வாக தூங்குவதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு முன்னர், திரவ உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மருந்துகளின் பக்க விளைவுகளால் இது ஏற்படுவதாக இருப்பின், மருத்துவரை அணுகி ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் மாற்றம் செய்யலாம். மேலும், மருத்துவரிடம் கலந்தாலோசித்து அல்ட்ரா சவுண்ட் மற்றும் யூரின் கல்ச்சர் போன்ற பரிசோதனைகளை செய்து, உரிய காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு தகுந்த மருத்துவம் செய்து கொள்ளலாம்.